டிரம்பின் அதிர்ச்சி அறிவிப்பு: கடும் கண்டனம் தெரிவித்த உலக தலைவர்கள்

பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமாவதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்துள்ளனர். இதன் விளைவாக, 2015-ம் ஆண்டு ‘பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்’ ஒன்று அமைக்கப்பட்டது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன.

புவி வெப்பமாவதை தடுக்க தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகை, வாயுக்களை கட்டுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

‘இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் ஜி.டி.பியில் 3 ட்ரில்லியன் டொலர் இழப்பீடு ஏற்படுவதுடன் சுமார் 6.5 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள்.

நான் அமெரிக்க குடிமக்களுக்காக தான் தெரிவு செய்யப்பட்டேன். பாரீஸ் ஒப்பந்ததற்காக அல்ல’ என டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா

டிரம்பின் இந்த அறிவிப்பு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பங்கு இல்லாமல் தற்போது பாரீஸ் ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள பிற நாடுகள் நல்ல வேலை வாய்ப்பையும் பலனையும் பெறுவார்கள்.

அதே சமயம், எதிர்காலத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்கும் என நம்புவதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் Antonio Guterres

டிரம்பின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் புவி வெப்பமாவதை தடுப்பதும், சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எனினும், பிற நாடுகள் ஒற்றுமையுடன் இந்த ஒப்பந்தத்தை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதுகாப்பார்கள் என் நம்புவதாக கூறியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்

பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளது மிகப்பெரிய தவறு. அமெரிக்காவிற்காக ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்.

அமெரிக்காவை பிரான்ஸ் நம்புகிறது. உலக நாடுகள் நம்புகிறார்கள். பூமி ஒன்று தான் இருக்கிறது. புவி வெப்பமாவதை தடுப்பதற்கு இது தான் ஒரே வழி என உருக்கமாக பேசியுள்ளார்.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.