கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; இறுதிச் சடங்கு ஞாயிற்றுக் கிழமை

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மூச்சுத் திணறல் காரணமாக தனது 80 வது வயதில் இன்று அதிகாலை சென்னை, பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இந்திய சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், 1937ம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.

அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார்.

இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999ம் ஆண்டு இவரின் ஆலாபனை கவிதைக்காக இந்திய சாகித்திய அகாடமி விருது பெற்றிருந்தார்.

மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார்.

பல்வேறு விருதுகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான கவிக்கோ அப்துல்ரஹ்மான், கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தவர் என்பது கூறத்தக்கது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநாள் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கவிக்கோ அப்துல் ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால் அவரின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.