ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாளான புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடக்கூடிய நாங்கள் இந்த மார்க்கத்திற்காக நபிமார்கள், நபித் தோழர்கள் மற்றும் அவர்களை பின் தொடர்ந்து வந்த எமது முன்னோர்கள் செய்த தியாகங்களை திரும்பிப் பார்க்க வேண்டிய ஒரு கடமைப்பாடு எமக்குள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலார் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஈத்துல் அழ்ஹா புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வாறு இப்றாஹீம் நபி உள்ளிட்ட நபி மார்களும் அவர்களைப் பின்பற்றிய மக்களும் சோதிக்கப்பட்டார்களோ அதே காரணத்திற்காக இன்று உலகம் பூராவும் பல்லாயிரக்காணக்கான முஸ்லிம் மக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக மியன்மார் நாட்டிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிராக அந்நாட்டு அரசு மற்றும் இனவாதக் குழுக்களினால் மிக மோசமானதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன்காரணமாக அந்நாட்டிலுள்ள எமது சகோதர முஸ்லிமகளின் உயிர்கள் மிகவும் கொடூரமான முறையில் காவு கொள்ளப்பட்டும், பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டும், உடைமைகள் நிர்முலமாக்கப்பட்டும் வருகின்றன.
ஆகவே எமது துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏற்ற ஒரு தினமாக இன்றைய தினம் அமைந்துள்ளதனால் இன்று பெருநாளினைக் கொண்டாடக் கூடிய அனைவரும், புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ள ஹாஜிகளும் எமது சகோதர உறவுகளுக்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இந்நாளினை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் முஸ்லிம்களாகிய நாம் இப்பெருநாள் கொண்டாட்டங்களின் போது மார்க்கத்திற்கு முரணான வீணான காரியங்களில் ஈடுபடுவது, ஏனைய சமூகங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வீணான செலவுகளில் ஈடுபடுவது போன்ற விடயங்களில் இருந்து முற்றாகத் தவிந்து நடக்க வேண்டும்.
எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தந்த வழிமுறையினை பின்பற்றி இந்த பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளினைக் கொண்டாடக்கூடிய அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும், புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஹாஜிகளுக்கும் மீண்டுமொரு முறை எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *