மீராவோடை பிரதேச வைத்தியசாலையினை தரமுயர்த்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நடவடிக்கைe

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை கிராம எழுச்சி திட்டத்தின்கீழ் 1982ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

மக்களின் தேவைக்கும், சனத்தொகை அதிகரிப்பிற்கும் அமைய 2003ஆம் ஆண்டு கிராம வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு அதன் பிற்பாடு இன்றுவரை பிரதேச வைத்தியசாலையாக இயங்கி வருகின்றது.
இவ்வைத்தியசாலையினால் முஸ்லிம் மற்றும் தமிழ் இரு இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கான வைத்திய சேவையினை பெற்றுக் கொள்கின்றனர். இருந்தபோதும் தற்போதுள்ள காலத்தின் தேவைகருதி இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது.
சென்ற கிழக்கு மாகாண சபை ஆட்சிக்காலத்தில் இவ்வைத்தியசாலை பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளபோதும் தற்போதுள்ள மாகாண ஆட்சியில் இவ்வைத்தியசாலையில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகவுள்ள வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினராகும்.
அதனடிப்படையில் இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர்முயற்சியினால் இவ்வைத்தியசாலையினை தற்போதுள்ள B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்குரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நஸீர் அவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினூடாக சந்தித்த மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்குரிய ஆவணங்களை திருகோணமலையிலுள்ள சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் வைத்து 2017.08.29ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கு மக்களின் நன்மைகருதி சிபாரிசுகளை வழங்கிய விளையாட்டுக்கழகங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் இத்தருணத்தில் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
மேலும், இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தியிலும், இதனை தரமுயர்த்துவதற்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு உறுதுணையாக இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கும், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நஸீர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் ஆகியோருக்கும் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
எம்.ரீ. ஹைதர் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *