சு.கா மாநாட்டில் அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்கள் பங்கேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களை மையப்படுத்தி நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எனவே, வரலாற்றில் முதன்முறையாக வடகிழக்கில் இருந்து அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, செப்டெம்பர் 2ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என்பதால் சு.காவின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா அக்கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் செப்டெம்பர் 3ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. “மக்களின் பலம் நேர்த்தியான கரங்களில்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில்அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதித்தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“எமது கட்சியின் நிறைவு விழாவினை செப்டெம்பர் 2ஆம் திகதி நடாத்தவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் பரீட்சை என்பவற்றை காரணம் காட்டி அதனைப் பிற்போடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனம் கட்சியித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்று 3ஆம் திகதிக்கு ஜனாதிபதி கட்சியின் 66ஆவது நிறைவு விழாவினை பிற்போட்டார். அதற்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களை மையப்படுத்தி நடாத்தப்படவுள்ளது. விசேடமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். எனவே, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து அதிகளவான கட்சி ஆதரவாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், வரலாற்றின் முதன்முறையான வடகிழக்கு மாகாணங்களில் இருந்து அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் இந்நிகழ்வில் கலநது கொள்ளவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தீர்மானங்கள் காரணமாக முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் பிரிந்து சென்றனர். கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுக்கு அதுவே காரணம்.
பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு பிரிந்து சென்ற முஸ்லிம்களை மீள கட்சியில் இணைத்துள்ளார். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் கட்சியின் எதிர்வரும் மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.
மாநாட்டைத் தொடர்ந்து தொடர்ந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் எவ்வாறு இரண்டு தடவைகள் வெற்றிபெற்றோமோ அதுபோன்று மூன்றாவது தடவையும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளிலும் – பணிகளிலும் ஈடுபடுமாறு ஜனாதிபதி எமக்கு பணிப்புரை வழங்கியுள்ளார் – என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *