கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைக்க ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட பேச்சு

கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமன்வசவுடன் இடம்பெற்றது.

மேல் மாகாண கல்வி, கலாசார,கலை, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவின் பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கொலன்னாவை கல்வி சபையினுடைய தலைவர் அப்துல் றஹீம் ஹாஜியார் மற்றும் மேல் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற கொலன்னாவை – வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலையொன்றை இல்லாத சூழலில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய வெல்லம்பிட்டிய பிரதேச மக்கள், பள்ளிவாயல்கள் சம்மேளனம் உள்ளிட்ட பலரது முயற்சியால் மேல் மாகாண கல்வி அமைச்சருடன் இது சம்பந்தமான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் புதிய பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உடன்பாடு காணப்பட்டது. இதற்கான அறிக்கைகள், ஆவணங்கள் என்பன உடனடியாக தயார் செய்யுமாறு மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச மேல் மாகாண கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *