வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை!

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் – முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை காலை  உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக என்னை நியமித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வரவு – செலவு திட்டத்தில் மூலம் 40 வீதமான நிதி ஒதுக்கீடுகள் இந்த அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட அமைச்சு என்பதால் இதன் ஊடாக கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.


கிழக்கு மாகாணத்தில் இதுவரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை. கிழக்கையும் தெற்கையும் , கிழக்கையும் வடக்கையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையொன்றை அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதியினை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.
விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹாஷீம் எனது நீண்டகால நண்பர். அவருடன் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *