முஸ்லிம்களின் பர்தாவை கழற்றும் கைங்கரியம் மைத்திரி – ரணில் ஆட்சியிலே – அஸ்வர் ஆவவேசம்

முஸ்லிம்கள் அணிகின்ற பர்தாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கழற்றுவார்கள் என்று முழு நாட்டிலும் முஸ்லிம்கள் மத்தியில் பொய்ப்பிரசாரம் செய்தே நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்தப் பொல்லாதஆட்சியை பதவிக்குக் கொண்டுவந்தார்கள் ஆனால், இன்று உண்மையிலே முஸ்லிம்களுடைய ஆடை அணிகலனான பர்தாவை கழற்றுவது மைத்திரி – ரணில் அரசாங்கம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை (10) கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் இலங்கையில் ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் பர்தா அணிந்து வந்த மாணவிகளுடைய பர்தாவைக் கழற்றி விட்டு பரீட்சை எழுதுமாறு கல்வி அதிகாரிகள் பணித்திருப்பதாக மத்திய மாகாணத்திலிருந்து வருகின்ற செய்தி இதனை ஊர்ஜிதம் செய்கின்றது.

எனவே முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இன்று முஸ்லிம்களுடைய பர்தாவை கழற்றுவதும் நீக்குவதும் இந்த அரசாங்கமே என்பதைத்தான் இந்த சம்பவம் நன்றாக நிரூபிக்கின்றது.

எனவே பள்ளிவாசல்ளை உடைப்பார்கள்,பர்தாவைக் கழற்றுவார்கள் என்று பொய்ப்பிரசாரம் செய்து முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் உடனடியாக கவனமெடுத்து இப்போது நடைபெறுகின்ற பரீட்சைக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தவை அணிந்து சென்று பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் கல்வி அமைச்சரும் ஏனோ – தானோ நிலையில் இருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ற முறை கூட கொழும்பு முகத்துவாரத்தில் உள்ள ஒரு பாடசாலை பர்தாவை கழற்றுமாறு மாணவிகளிடம் பணிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்ட உடனே அது குறித்து அரசாங்க உயர் மட்டத்திற்கு அறிவித்தோம். ஆனால்,ஒன்றும் நடைபெறவில்லை.

ஆகவே, இன்று இந்த நாட்டிலே முஸ்லிம்களுடைய பாரம்பரியங்களை அழிப்பதற்கு மிகவும் மும்முரமாக நின்று செயலில் இறங்குகின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றேன் – என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *