NFGG பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்றால் என்ன?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும் (Recognized Political Party).

02. யாரால், எப்போது அங்கீகரிக்கப்பட்டது?

தேர்தல் ஆணைக்குழுவினால், 2017 ஜுன் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

03. NFGG என ஏன் இது அழைக்கப்படுகிறது?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஆங்கிலத்தில் National Front for Good Governance என அழைக்கப்படுகிறது. அதன் சுருக்க வடிவமே NFGG ஆகும்.

04. அப்படியானால் இது புதிய கட்சியா?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2017 இல் தான் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும், அதன் ஆரம்பப் பயணம் காத்தான்குடியில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Good Governance – PMGG) என்ற பெயரில், 2006 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

05. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG), ஏன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

ஆரம்பத்தில் இது பிராந்திய அரசியல் அமைப்பாகவே இயங்கியது. 2013 இன் பின்னர் நாட்டின் நாலா புறமிருந்தும் பல்வேறு முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து, இதனை ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமிக்க செய்தனர். அதனடிப்படையில் 2014 முதல், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

06. NFGG இதுவரை எதிர்கொண்ட தேர்தல்கள் யாவை? அவற்றில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்ன?

I. 2006 காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 3223

II. 2011 காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 6323

III. 2015 பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகள்

• பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் – 12468
• வைத்தியர் சாஹிர் – 14697

07. நல்லாட்சி என்பதால் நீங்கள் கருதுவது யாது?

மக்களுக்குப் பொறுப்புக் கூறுதல், வெளிப்படைத் தன்மை, ஊழல் மோசடியை ஒழித்தல், மக்களுக்கு விசுவாசமான அரசியல், கலந்துரையாடி ஆலோசித்து முடிவெடுத்தல், பொதுப் பணத்தையும் பொதுச் சொத்தையும் விரயம் செய்யாதிருத்தல், நேர்மை, நாணயம், சுயகௌரவம்… இது போன்ற பண்புகளே நல்லாட்சிப் பண்புகளாகும்.

இதனையே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

08. NFGG முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியா?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இன மையக் கட்சியல்ல (Ethnocentric Party). இது முற்போக்கான விழுமிய அரசியலை முன்னெடுக்கும் இலங்கை மக்களுக்கான பொதுக் கட்சியாகும்.

இதன் ஸ்தாபக அங்கத்தவர்கள் முஸ்லிம்களே. எனினும், பரந்துபட்ட இலங்கையின் நலனுக்காக செயற்படும் கட்சியாகவே இது செயற்படுகிறது.
அந்த வகையில் இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லோருக்குமான கட்சியாக இது உள்ளது.

09. NFGG யில் எப்படி இணைந்து கொள்ளலாம்?

18 வயது பூர்த்தியடைந்த இலங்கையர் எவரும் ஆரம்ப அங்கத்தவராக (Primary Member) இணைந்து கொள்ளலாம்.

10. அங்கத்துவப் படித்தரங்கள் உள்ளனவா?

ஆம். 05 வகையான அங்கத்துவப் படித்தரங்கள் உள்ளன.

1. ஆரம்ப அங்கத்தவர் (Primary Member)
2. இணை அங்கத்தவர் (Associate Member)
3. செயற்பாட்டு அங்கத்தவர் (Active Member)
4. கௌரவ அங்கத்தவர் (Honorary Member)
5. ஸ்தாபக அங்கத்தவர் (Founder Member)

முதலாவது கட்டம் ஆரம்ப அங்கத்தவர் ஆகும். 18 வயது பூர்த்தியான இலங்கையர் எவரும், விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து ஆரம்ப அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்.

உள்ளுர் கட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். கட்சியின் தேசிய அமைப்பாளரே (National Organizer) அங்கத்துவம் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பானவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *