தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தேர்தல் பிரச்சார செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை தொடர்பான செயலமர்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை ஏற்பாடு செய்த மேற்படி செயலமர்வு 08.11.2017 ஆம் திகதி கலை கலாசார பீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கான இணை அனுசரணையினை கொழும்பினைத் தளமாகக் கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (ஊஆநுஏ) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் விஞ்ஞானத் துறை தலைவர் திரு. எம்.எம்.பாஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.ஏ.தர்மசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் துறைசார் விரிவுரையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தேசிய வேலைத் திட்டங்கள் குறித்து தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் ஜனநாயக சமூகமொன்றில் வாக்காளர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை வலியுறுத்திக் கூறியதுடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கும் வாக்களிப்பதற்கான முழு உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடும்போது, மாற்றுத் திறனாளிகள் தங்கு தடையின்றி வாக்களிப்பு நடத்தையில் ஈடுபவதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, சமூகத்தின் சகல தரப்பினரும் குறிப்பாக புத்திஜீவிகள் உட்பட தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவிடப்படுகின்ற நிதியும் பிரச்சார உத்திகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற தவறான வழிமுறைகளும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் உரையாற்றினார்.
இச்செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை தொடர்பான விளக்கத்தினை ஓய்வுபெற்ற உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.ஏ.தர்மசிறி வழங்கினார். அவரது உரையில் புதிய தேர்தல் முறையினை அடிப்படையாகக் கொண்ட வட்டாரப் பிரிப்பு, அவற்றுக்கான ஆசன ஒதுக்கீடு, நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல், வாக்களிப்பு முறை, வெற்றி பெற்ற கட்சிகளுக்கான ஆசனங்களை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட விடயங்கள் சிலாகித்துப் பேசப்பட்டன.
மேற்குறிப்பிட்ட உரைகளினைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இச்செயலமர்வினை ஜனாதிபதி செயலக மொழிபெயர்ப்பாளர் திரு.மணிமாறன் உரைபெயர்த்ததோடு, அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌசர் ஒருங்கிணைப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *