சவுதி அரசாங்கத்தின் நிதியுதவியில் அம்பாறை – நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
அவ்வீடுகளை கையளிப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், வீடுகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கு மாத்திரம் வழங்கப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மூன்று இனத்தாருக்கும் விகிதாசார ரீதியாகப் பகிர்ந்தளிக்கும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இற்றைக்கு எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
வீடுகள் உரிய பயனானிகளுக்கு கால தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று பல தடவைகள் நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும், பகிர்ந்தளிப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விரயமான காலத்தினால் வீடுகள் தற்போது பயன்படுத்த முடியா நிலையில் சேதமடைந்துள்ளன.
வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.