இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 8 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்தார்.

இவர்களின் டோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்துள்ள 8 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

மீனவர்களை பொறுப்பேற்க தமது அதிகாரிகள் சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று முந்தினம் புதுடெல்லியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, கடற்றொழிலுக்காக இழுவை படகுகளை பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை இனிமேல் விநியோகிக்காதிருக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது இழுவை படகுகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் தௌிவுபடுத்தியிருந்தனர்.

இதேவேளை, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கும் இந்த பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *