6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி எஹலியகொட பகுதியிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை அதிகமாக நிலவுவதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கலபட பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 80 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக நிறுவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹலியகொட, அயகம, கிரிஅல்ல, நிவித்திகல, கொலன்ன மற்றும் பல்மடுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர, கொட்டபொல பகுதிகளிலும் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, புலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ,கோரளை மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ, நாகொட,தவலம, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா, மாத்தறை, கேகாலை, மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையை அடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.

குக்குளேகங்க நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் அகலவத்த, பிங்கிரிய, பதுரலிய, ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான மழை காரணமாக நில்வளா கங்கை, மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தாழ்நிலப்பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *