அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான தீர்வு அவசியம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு அதிக கரிசனை செலுத்த வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய விசேட திட்டமொன்று அவசியம் எனவும் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 14 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் உடல் மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் இன்று வடக்கில் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போரட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள் காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கிய ஒன்றாகும். இது தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.
விசேடமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக பலர் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது நிபந்தனைகளின் அடிப்படையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அம் மக்கள் படும் துன்பங்கள் நன்கு அறிந்தவன். இதனால் நான் பல்வேறு சந்தர்பங்களில் இவ்விடயம் தொடர்பில் அழுத்தம் – திருத்தமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பேசியுள்ளேன்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், அசாதாரன சூழலில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்றாகும் என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
ஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில்அமைதி சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான சமாதானமான அமைதியான சூழலில் கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றவர்கள் உடனடியாக ஏதோ ஒரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கின்ற மூன்று கைதிகளினதும் உடல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *